கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5 சதவீதத்தையாவது அதிமுக ஆட்சியில் செய்திருப்பார்களா என ஒரு திறந்த சவாலை விடுத்தார். தற்போதைய திமுக அரசு மற்றவர்களைப் போல வெறும் வார்த்தைகளால் ‘வடை சுடும்’ அரசு அல்ல என்றும், ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் இன்று முதலிடத்தில் சாதனை படைத்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சி இனி எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய முதலமைச்சர், திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாகவே தமிழகம் பல்வேறு துறைகளில் தேசிய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
