மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அதிவேக ரயில் திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறையும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 அதிவேக வழித்தடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சென்னை-ஹைதராபாத் இடையேயான பயணமும் வெறும் 3 மணி நேரத்திற்குள் சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ரூ.16 லட்சம் கோடி பிரம்மாண்ட முதலீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ரயில்கள், தென் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வழித்தடங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தும் என ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
