சென்னையில் நேற்று மாலை முதல் தீவிரமடைந்துள்ள கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் பதிவான அதீத மழையின் காரணமாக பாரிமுனையில் 27 செ.மீ, கத்திவாக்கத்தில் 26 செ.மீ மற்றும் திருவொற்றியூரில் 19 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. எண்ணூர், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்பும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பெருமழையின் போது நீண்ட நேரமாக நீடித்த பயங்கர இடிச் சத்தமும், வானைப்பிளந்த மின்னல் வெளிச்சமும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் வெட்டிய போது சில பகுதிகள் பகல் போல காட்சியளித்ததாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. பாதுகாப்பைக் கருதி பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மறுபுறம், பண்டிகை கால விடுமுறை தொடங்கியுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியிலேயே மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது பயணிகளை கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும், நிலைமையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர மீட்புப் பணிகளிலும், தேங்கிய நீரை அகற்றும் பணிகளிலும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் மீட்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் சென்று இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் அவசர உதவிக்கு மாநகராட்சி கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
