தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகள் தடையின்றித் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் தொடங்கும் முன்னரே, அதாவது மார்ச் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை, சென்னை மாநகராட்சி சுமார் 180 புதிய டெண்டர்களை வெளியிட்டு மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சரியாக 20 நிமிடங்களுக்கு முன்பு வரை, சுமார் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டன. குறிப்பாக, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் மற்றும் மண்டல வாரியான பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் சனிக்கிழமையே இறுதி செய்யப்பட்டன. இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்திலும், இந்தப் பணிகளை மேற்கொள்வதில் எந்தவித சட்டச் சிக்கலும் இருக்காது என்பதை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.
அண்ணா சாலை மேம்பாலம், விருகம்பாக்கம் கால்வாய் பாலங்கள், ஏபிசி மையங்கள் மற்றும் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாடி பாலம் போன்ற பெரிய அளவிலான மெகா திட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அவை வழக்கம்போல நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் இந்தப் பாலங்கள் மற்றும் சாலைகளை, எவ்வித ஆடம்பர விழாக்களும் இன்றி மக்கள் பயன்பாட்டிற்காக நேரடியாகத் திறந்து விடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள் முன்கூட்டியே கோரப்பட்டதால், புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது என்ற தடையைத் தவிர்த்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அண்ணா நகர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் எம்.எல்.ஏ தொகுதியின் மேம்பாட்டு நிதியின்கீழ் பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தப் பணிகளும் இந்த விதிமுறைக்குள் அடங்கும் என்பதால், அவை தடையின்றித் தொடர்வது சென்னை வாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
