சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்களை அடுத்து, அங்குள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள மத்திய நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய கண்காணிப்புப் பொறியாளர் முதல் உதவிப் பொறியாளர் வரை அனைத்து அதிகாரிகளும் பிற துறைகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 1,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு தலைமையக நகரமைப்புப் பிரிவில்தான் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னரும் பொதுமக்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டு லஞ்சப் புகார்கள் குவிந்தன. சில அதிகாரிகள் அரசியல் பின்னணியுடன் ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது அரசு மாறியுள்ள சூழலில் அவர்களின் நீண்டகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்த அதிரடி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த இடமாற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாகும். இனிமேல் விதிகளுக்கு உட்பட்டு, இரண்டு நாட்களுக்குள் கட்டிட அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் சீல் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிற துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதால், அடுத்தடுத்து பல அதிரடி இடமாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
