“இப்படியும் ஒரு மனிதரா?”… ரூ.156 ஆட்டோ கட்டணத்திற்கு ரூ.15,682 அனுப்பிய சிஇஓ… ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி காரியம்…!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஷுபம் குனே, சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. அன்று காலை, ஒரே ஒரு நாள் மட்டுமே நகரத்தில் தங்கியிருந்த ஒரு சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக ஷுபம் அவசரமாகக் கிளம்பியுள்ளார். காலை 7 மணி சந்திப்பிற்குத் தாமதமாகிவிட்ட பதற்றத்தில், ஆட்டோவில் பயணித்த அவர், கட்டிடத்திற்கு வெளியே வந்ததும் அவசர அவசரமாக கூகுள் பே (Google Pay) மூலம் பணத்தைச் செலுத்தியுள்ளார். தனக்குக் காட்டிய கட்டணத் திரையைக்கூடச் சரியாகக் கவனிக்காமல், ஆட்டோ பயணத்திற்கான அசல் கட்டணமான ₹156-க்கு பதிலாக, தவறுதலாக ₹15,682 என்ற பெரும் தொகையை உள்ளிட்டுப் பணத்தை அனுப்பிவிட்டு உள்ளே விரைந்துள்ளார்.

ஆனால், அவர் அவ்வளவு பதற்றத்துடன் சென்ற அந்தச் சந்திப்பு எதிர்பாராதவிதமாகத் ரத்தானது. இதனால் ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும் ஷுபம் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது, அவருக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவரை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநரான அல்தாப், அங்கிருந்து செல்லாமல் அதே இடத்திலேயே அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தார். ஷுபத்தைக் கண்டதும் அவரை அணுகிய அல்தாப், அவர் தவறுதலாகத் தனக்கு அதிகப் பணத்தை அனுப்பிவிட்டதைக் கூறி, தான் பெற்ற முழுத் தொகையையும் அப்படியே ஷுபத்தின் கணக்கிற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.

   

நேர்மையின் சிகரமாக விளங்கிய அந்த ஓட்டுநரின் செயலைக் கண்டு நெகிழ்ந்த ஷுபம், அசல் ஆட்டோ கட்டணமான ₹156-ையாவது எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அல்தாப் அதனையும் வாங்க மறுத்துவிட்டார். இறுதியாக, அவரது உன்னதமான குணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஷுபம் அவருக்கு ₹500 தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். “இப்படியும் சில மனிதர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று ஆட்டோ ஓட்டுநர் அல்தாபின் நேர்மையைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.