விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த சிக்கல்கள் நீங்கி, தற்போது ஒரு தெளிவான பாதை கிடைத்துள்ளது. இத்திரைப்படம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் 27-ம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகப்போகும் செய்தி, கடும் நெருக்கடியில் இருந்த படக்குழுவினருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை நீதிமன்ற உத்தரவுப்படி படம் மீண்டும் மறுஆய்வுக்குச் சென்றாலும், சென்சார் சான்றிதழ் வழங்கும் பணிகள் மிக விரைவாக முடிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனைத்து சட்ட சிக்கல்களும் முடிவுக்கு வந்து, பிப்ரவரி மாதத்தில் ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாவது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன், படத்தின் ரிலீஸை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர்.
