செப்டம்பர் 1 முதல் கோயில்களில் போன் பயன்படுத்த தடை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…. அறநிலையத் துறை அதிரடி….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் அமைதியான வழிபாட்டை உறுதி செய்யவும் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை முழுமையான தடை விதித்துள்ளது. இப்புதிய உத்தரவின்படி, பக்தர்கள் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காகக் கோயில் வளாகத்தில் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டு, ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். தடையை மீறி கோயிலுக்குள் புகைப்படம், வீடியோ அல்லது சமூக வலைதளங்களுக்கான ‘ரீல்ஸ்’ எடுப்பவர்கள் மீது சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கருவறை மற்றும் தெய்வச் சிலைகளைப் படம்பிடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, திருக்கோயில்களின் ஆகம விதிகளும் மரபுகளும் உறுதியாகப் பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில்களுக்கு வரும்போது சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஐபிக்கள் வருகையின் போது அவர்களுடன் ஊடகங்கள் கோயிலுக்குள் சென்று படம் பிடிப்பதையோ அல்லது வீடியோ எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும், அவர்களின் வருகை குறித்து குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆணையர் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆன்மீகச் சூழலையும் கோயில்களின் அமைதியையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.