“வீட்டுத் தோட்டத்தில் பிணமான பெண்”… தலையணையால் அழுத்தி கொன்ற தம்பதி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூர கொலை…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் வெளிநாட்டில் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி பிருந்தா தேவி (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய பிருந்தா தேவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அவரது பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிருந்தா அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து (43) – சரவண பிரியா (32) தம்பதியின் வீட்டிற்குள் செல்வதும், பின்னர் அவர் அங்கிருந்து வெளியே வராததும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாரிமுத்து மற்றும் சரவண பிரியாவிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பிருந்தா தேவி கொலை செய்யப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். போலீஸார் தரப்பில் கூறப்படும் முதற்கட்ட தகவலின்படி, சரவண பிரியாவும் பிருந்தா தேவியும் நெருங்கிய தோழிகள். சம்பவத்தன்று வெளியில் சென்றிருந்த சரவண பிரியா எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திரும்பியபோது, தனது கணவர் மாரிமுத்துவுடன் பிருந்தா தேவி தனிமையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாற, மாரிமுத்துவை ஒரு அறைக்குள் பூட்டி வைத்த சரவண பிரியா, பிருந்தா தேவியைத் தாக்கி, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

   

இருப்பினும், பிருந்தா தேவியின் உறவினர்கள் இச்சம்பவத்தில் வேறு ஒரு கோணத்தை முன்வைக்கின்றனர். பிருந்தா தேவிக்கும் சரவண பிரியாவுக்கும் இடையே நகை மற்றும் பணப் பரிமாற்றம் இருந்ததாகவும், தான் கொடுத்த நகையைத் திரும்பக் கேட்டதாலேயே பிருந்தா திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பிருந்தா தேவியின் முகத்தில் ஏழு இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததாகக் கூறப்படுவது, அவர் கொல்லப்படுவதற்கு முன்பு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. இது சாதாரண ஆத்திரத்தில் நடந்த கொலையா அல்லது பணத்திற்காக நடந்த சதியா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

கொலைக்குப் பிறகு மாரிமுத்து, தனது மைத்துனர் கார்த்திக்கை வரவழைத்து, பிருந்தா தேவியின் உடலை காரில் ஏற்றிச் சென்று ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தங்களது தோட்டத்தில் ரகசியமாகப் புதைத்துள்ளனர். தற்போது மாரிமுத்து மற்றும் சரவண பிரியாவை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணை அடித்துக் கொன்று சடலத்தை தோட்டத்தில் புதைத்த இந்த கொடூர சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.