முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு செய்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “எனது வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்ய முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக வரும் செப்டம்பர் 18-ஆம் தேதியன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆளும் தவெக அரசின் தவறுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததாலேயே தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அதைச் சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்றும் அவர் தனக்கே உரித்தான பாணியில் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு ஆஜரான பிறகு தாராபுரத்தில் திட்டமிட்டபடி தனது அரசியல் பிரசாரத்தைத் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஆதாரம் இல்லாமல் எந்த அரசும் சோதனை நடத்தாது என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
