ரூ.256.44 கோடி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி அழகிரிக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கீழவளவு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட இச்சுழல் வழக்கில், தயாநிதி அழகிரி 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமக்கு நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால் வழக்கை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அவருக்கான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தயாநிதி அழகிரி சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் வெளியானதையும், நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்து புகைப்படம் வெளியிட்டதையும் சுட்டிக்காட்டி, அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
தயாநிதி தரப்பு வழக்கறிஞர், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுப்படி நரம்பியல் குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதால், சமூக வலைதளப் படங்களை மட்டும் வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கூடாது என பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி S. சண்முகவேல், கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதும் தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும் போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பி, அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிப்மர் முதன்மை மனநல மருத்துவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து, தேவைப்பட்டால் அவரை உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்து, அறிக்கையைச் சீலிடப்பட்ட கவரில் நேரடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
