பட்டப்பகலில் இந்த அராஜகமா?… பேருந்து நிறுத்தத்தில் அலறிய பெண்கள்… நெரிசலான சந்திப்பில் குடியும் கூத்தும்… தீயாய் பரவும் வீடியோ…!!

By Gayathri on கார்த்திகை 5, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டாரப் பகுதியான நெடுங்குளம் சந்திப்பில், பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சென்று வரும் இடத்தில் நபர் ஒருவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகத் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் சாலைப் பிரிவுகளில் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் தொடர்வதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும் கடுமையான அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பொது இடங்களில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் மது அருந்துவோர் மீது காவல்துறை கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு உடனடியாகத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.