நடிகர் விஜயகாந்த். ஒரு திரைப்பிரபலம் மற்றும் அரசியல்வாதி என்பதை தாண்டி, ஒரு நல்ல மனிதர் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர். பசி என்று வருபவர்களுக்கு வயிறாற உணவு அளித்த வள்ளல் விஜயகாந்த். சினிமாவில் சில படங்களை மட்டுமே நடித்தப் பிறகு சென்னையில் பெரிய பங்களாக்களை கட்டும் நடிகர்கள் மத்தியில், தான் இறக்கும் வரை, சாலிகிராமத்தில் கட்டிய ஒரு வீட்டில் எளிமையாக வசித்து வந்தார் விஜயகாந்த்.
அவர் என்று உடல்நிலை சரியில்லாமல், அரசியலில் ஆக்டிவ்வாக இல்லாமல் போனாறோ அன்றே அக்கட்சியும் செல்வாக்கு இன்றி போனது. இன்று வரையிலும் மக்கள் அவரை கொண்டாடுவதற்கான காரணம், அவரது வள்ளல் குணம் மட்டும் தான். மீண்டு வருவார் மீண்டு வருவார் என பல ஆண்டுகள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி நம்மை விட்டு பிரிந்து சென்றார். மகன்களின் திருமணத்தை பார்க்காமல் சென்று விட்டார், காட்டுப்பாக்கத்தில் கட்டி வரும் பங்களாவிற்கு செல்லாமல் சென்று விட்டார் என பலரும் அவரை நினைத்து கவலையடைந்து வருகின்றனர்.
காட்டுப்பாக்கத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது விஜயகாந்தின் பங்களா. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பங்களா 10 வருடங்களை தாண்டியும் இன்றும் கட்டி முடிக்காமல் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றப் போது, விஜயகாந்த் நேரடியாக இங்கு வந்து வீட்டை பார்த்து சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரால் இங்கு வர முடியவில்லை. கிரகப்பிரவேசம் கூட மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அந்த பங்களாவிற்கு விஜயகாந்த் குடும்பம் குடிபெயர இருப்பதாகக் கூறப்படுகிறந்து. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் கட்சி தொண்டர்கள் வந்தால் அவர்களுக்கு தேவையான வசதியுடன் உருவாகி வருகிறது இந்த பங்களா.
காட்டுப்பாக்கத்தில் இந்த ஒரு ஏக்கர் நிலத்தை விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்திற்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தப் போது, அவரது படங்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை. அப்போது சினிமாவில் வெற்றி ஹீரோவாக திகழ்ந்த விஜயகாந்திடம் சென்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை சினிமாவில் வளர்த்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி விஜயகாந்துடன் விஜய் சேர்ந்து நடித்த செந்தூரப்பாண்டியன் திரைப்படம் வெற்றி பெற்று, விஜய்யின் சினிமா பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. அந்த நன்றிக் கடனுக்காக இந்த இடத்தை சந்திரசேகர் விஜயகாந்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பங்களாவிற்கு வந்த பிறகு தான் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டாராம். நிதி பற்றாக்குறை உட்பட சில பல காரணங்களால் 10 வருடங்களுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் இந்த பங்களாவில் அவரது குடும்பம் எப்போது குடியேறுவர், விஜயகாந்தின் ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.