உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள தர்மாவுலா பகுதியில், மணிக்கு 120 கிலோமீட்டருக்கும் அதிகமான அதிவேகத்தில் பாய்ந்து வந்த பர்லேனோ கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு முறிந்து சாலையில் விழுந்ததோடு, அந்தப் பலத்த வேகத்தில் பாய்ந்த கார் அருகில் இருந்த ஒரு வீட்டின் இரும்பு கேட்டை நொறுக்கிக்கொண்டு தலைகீழாகப் புரண்டது. விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், நல்வாய்ப்பாகக் கார் அவர்கள் மீது மோதாமல் விலகிச் சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தில் மின் கம்பம் சாலையில் முறிந்து விழுந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இக்கொடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
