சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கும்மிடிப்பூண்டி அருகே விபத்துக்குள்ளானது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 8 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். கவரைப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இந்தத் துயரமான விபத்தில் திவ்யப்பிரியா (19) என்ற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரில் உடன் பயணம் செய்த மற்ற 9 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
