ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சௌகிபாஸ் கிராமத்தில் மூன்று வயது சிறுமி ஒருவருக்கு மிட்டாய்க்கு பதிலாக வெடிபொருளை கடைக்காரர் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷு என்ற அந்த சிறுமி, தனது சகோதரியுடன் மளிகைக் கடைக்குச் சென்றபோது, கடைக்காரரான சுடில் (என்கிற காலா) மிட்டாய் போன்ற தோற்றமளிக்கும் ஒரு வெடிபொருளைக் கொடுத்துள்ளார். அதை மிட்டாய் என நினைத்து சிறுமி வாயில் வைத்து கடித்தபோது, அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் சிறுமியின் தாடை மற்றும் கன்னம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
படுகாயமடைந்த சிறுமி உடனடியாக அல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முகச்சீரமைப்பு நிபுணர்களால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுமி தற்போது உயிர் பிழைத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராம்நகர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கடைக்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், சிறுமி கண்ணாடி மீது விழுந்ததால் தான் காயம் ஏற்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் அது வெடிபொருள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும் அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
