விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தமிழக அரசின் “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை விமர்சித்துப் பேசினார். அப்போது அவர் ஒரு உதாரணத்திற்கு, “எனக்கு நயன்தாரா வேண்டும் என்பதுதான் என் கனவு, அதை இந்த அரசு நிறைவேற்றுமா?” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் முன்னாள் அமைச்சர், ஒரு பெண் திரைக் கலைஞரைப் பற்றி பொதுவெளியில் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அவரது இந்தப் பேச்சுக்குத் திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தனது பேச்சு சர்ச்சையானதை உணர்ந்த சி.வி.சண்முகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பேச்சின் போது நடிகை நயன்தாராவின் பெயர் தவறுதலாகவும், உள்நோக்கம் இல்லாமலும் உச்சரிக்கப்பட்டுவிட்டது என்றும், அதற்காகத் தான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திட்டத்தை விமர்சிக்கும் போக்கில் ஓட்டத்தில் வந்த வார்த்தை அது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
