தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தெளிவான தீர்ப்பு என்று குறிப்பிட்டார். மேலும், கொள்கை ரீதியான எதிரியான திமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை ஆதரிக்கப் போவதாகவும் சி.வி. சண்முகம் தெரிவித்தார். கட்சியின் 47 எம்.எல்.ஏ-க்களில் 35 பேர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய அவர், மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்று தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதே சரியான அரசியல் நகர்வு என்று விளக்கமளித்தார். இதனால் அதிமுக இரண்டு அணிகளாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தக் கிளர்ச்சியை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிளர்ச்சி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்ததன் மூலம், தற்போது தன்னிடம் 17 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக இ.பி.எஸ் நிரூபித்துள்ளார். தன்னை மீண்டும் சட்டமன்ற அதிமுக தலைவராக அங்கீகரிக்கக் கோரி அவர் பேரவைச் செயலாளரிடம் மனு அளித்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கத் தேவையான எண்ணிக்கையைத் தக்கவைக்க இரு தரப்பினரும் எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
எடப்பாடியின் நகர்வுக்குப் போட்டியாக, சி.வி. சண்முகம் தரப்பு 30 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் எஸ்.பி. வேலுமணியைச் சட்டமன்றத் தலைவராக அறிவித்து சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. அதேசமயம், எடப்பாடியைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேலுமணியை அந்தப் பதவியில் அமர்த்த மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்துப் பெறும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த உட்கட்சி மோதலால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.
