அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட சி.வி.சண்முகம், தற்போது தனித்து விடப்பட்ட நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யாமல் ஈபிஎஸ்ஸிடம் சரணடைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காகத் தனது ஆதரவாளர் ராமதாஸ் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் தூது அனுப்பியுள்ளதாகவும், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றக் காய் நகர்த்தியதாகவும் கூறப்படுகிறது. மயிலம் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து தொடர்ந்து நன்றி தெரிவித்து வரும் அவர், தொகுதி மக்களுக்கு கடமையாற்றுவேன் எனக் கூறியதன் மூலம் தனது ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 அதிமுக ஒன்றிய செயலாளர்களில் பெரும்பாலானோர் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போதைய மாவட்ட செயலாளரான பசுபதிக்கு 6 பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். இதனால் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், பசுபதி மாவட்டம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வானூர், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.
கட்சியில் சி.வி.சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தின் ஆதிக்கம் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவும் நிர்வாகிகள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என பசுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சி.வி.சண்முகம் சென்னை சென்று தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர் பசுபதியின் இந்த எதிர்நடவடிக்கையால் விழுப்புரம் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் தொடர்ந்து பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது.
