மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநருக்குத் தவறுதலாக அதிகப் பணம் அனுப்பியதும், அதற்கு அந்த ஓட்டுநர் காட்டிய நேர்மையான எதிர்வினையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. ‘ஹிங்கிலிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான சுபம் குனே, ஒரு சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அதிகாலை 7 மணிக்கே அவசரமாகப் புறப்பட்டுள்ளார். ஆட்டோவில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், அதற்கான கட்டணமான ₹156-ஐ கூகுள் பே மூலம் செலுத்த முயன்றார். ஆனால், அவசரத்தில் தொகையைச் சரிபார்க்காமல் தவறுதலாக ₹15,682 என டைப் செய்து அனுப்பிவிட்டு, மொபைல் திரையைக் கூடப் பார்க்காமல் உடனே கூட்டத்திற்குள் ஓடியுள்ளார்.
அன்றைய காலைப் பொழுது சுபம் குனேவுக்கு சாதகமாக அமையவில்லை. அவர் கலந்துகொண்ட தொழில்முறைச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது போன்ற ஒரு ஏமாற்றத்தை அவருக்குத் தந்தது. மிகுந்த மனவருத்தத்துடன் அவர் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கே ஆட்டோ ஓட்டுநரான அல்தாஃப் என்பவர் அதே இடத்திலேயே அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். சுபம் குனேவை அணுகிய அல்தாஃப், பணப் பரிவர்த்தனையில் தவறு நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆன்லைன் மூலம் தனக்கு வந்த முழுத் தொகையான ₹15,682-ஐயும் அப்படியே அவரிடம் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் இந்த அசாத்திய நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த தொழிலதிபர், அவருக்கான உண்மையான கட்டணமான ₹156 மற்றும் அவர் காத்திருந்ததற்கான இழப்பீட்டுத் தொகையையாவது வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால், ஓட்டுநர் அல்தாஃப் அதை வாங்க மறுத்து, “சார், இது நம்ம இருவருக்குமே நாளின் தொடக்கம் (உங்கள் காலைப் பொழுதை நான் கெடுக்க விரும்பவில்லை)” என்று கூறிச் சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சுபம் குனே தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஒரு வாரம் கழித்து அந்த சர்வதேச வாடிக்கையாளர் அவருடன் இணைந்து பணியாற்றச் சம்மதித்த நல்ல செய்தியைக் கேட்டவுடன், அவருக்கு ஆட்டோ ஓட்டுநரின் நினைவுதான் முதலில் வந்துள்ளது. உடனே, அல்தாஃப்பைத் தேடிப்பிடித்து நன்றிக்கடனாக ₹500 அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
