பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டாவின் பெங்களூரு இல்லத்தில் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள நடிகையின் வீட்டில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த நபர் வைசாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வைசாக் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் தான், அவர் கடந்த ஒரு வாரமாக நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில் தங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு வைசாக் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
