திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம் அருகே உள்ள கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் மணிமேகலா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் முதல் மகன் ரவீன் குன்னத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இரண்டாவது மகன் முகிலன் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகின்றார்.
மூன்றாவது மகனான காமேஸ்வரனுக்கு தற்போது இரண்டு வயதாகின்றது. எனவே மணிமேகலா வீட்டிலிருந்து குழந்தையை கவனித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்து பள்ளி வாகனத்திற்கு காத்திருந்த நிலையில் ரவீனின் பள்ளி வாகனம் வந்தபோது அவரை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். பிறகு முகிலனின் பள்ளி பேருந்துக்காக காத்திருந்தார்.
இதனிடையே மூன்றாவது குழந்தை காமேஸ்வரன் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது முகிலன் படிக்கும் பள்ளியின் வேன் வேகமாக வந்து ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியதில் குழந்தையை டயரில் சிக்கி படுகாயம் அடைந்தது. இதனைப் பார்த்த குழந்தையின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
