உத்தரகாண்ட் மழையின் கோரத்தாண்டவம்…. கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான ஹோட்டல்…. பதறவைக்கும் வைரல் வீடியோ….!

By SATHISH R on ஆடி 9, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக டெஹ்ரி கர்வால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுர்கந்தா தேவி கோவில் அருகே உள்ள கடுக்கால் என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் கோரத்தாண்டவத்தால் அங்கிருந்த ஒரு குடியிருப்பு வீடும், அதன் அருகில் இருந்த ஒரு ஹோட்டலின் ஒரு பகுதியும் அடுத்த சில நொடிகளில் சீட்டுக்கட்டுகளைப் போல மொத்தமாக சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடைவிடாத பருவமழை காரணமாக, இப்பகுதியின் மலைச்சரிவுகளில் உள்ள மண் முற்றிலும் தளர்வடைந்து, நிலப்பரப்பு நிலையற்றதாக மாறியதே இந்த கட்டிட சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மழையின் தீவிரத்தால் கட்டிடங்களின் அடியில் இருந்த நிலம் திடீரென சரிந்து நகர்ந்ததால், வெறும் 10 முதல் 15 வினாடிகளுக்குள் அந்த வீடும் ஹோட்டலும் இடிபாடுகளாக மாறின. இந்த திடீர் விபத்து அப்பகுதியில் இருந்த மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

   

இருப்பினும், இந்த இமாலய விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. கட்டிடங்கள் சரிவதற்கு முன்பாகவே, அந்த இடம் ஆபத்தானது என்பதை உணர்ந்த உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், அங்கு வசித்து வந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். அதிகாரிகளின் இந்த துரிதமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒரு மிகப்பெரிய பேரழிவு நூலிழப்பில் தவிர்க்கப்பட்டு, பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

   

தற்போது, மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற ஆபத்தான கட்டிடங்களைக் கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்டின் பல மலை மாவட்டங்களுக்கு இன்னும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும், பொதுமக்களும் தேவையின்றி மலைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளிலிருந்து தள்ளியிருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.