பெங்களூரு உப்பார்பேட்டை பகுதியில், தேவி என்ற திருநங்கை அதிகாலை நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் மதிப்புமிக்க பொருட்கள் ஏதும் இல்லாததால் வெறும் 200 ரூபாயை மட்டும் பறிக்க முயன்றுள்ளார். அந்தப் பணத்தை கொடுக்க தேவி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொலையாளி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த கவுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய கவுதமை அதிரடியாக கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
