கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக முகாம் செயலாளர் இளையராஜா (39), கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி விவசாயக் கிணறு ஒன்றில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் மதுபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி அஸ்வினிதாவின் (30) நடத்தையில் சந்தேகமடைந்த சிறுபாக்கம் போலீசார், அவரது கைபேசி உரையாடல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளையராஜாவின் சித்தி மகனான வெங்கடேசனுடன் (32) அஸ்வினிதாவுக்கு தவறான உறவு இருந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தைக் கண்டித்த இளையராஜாவை வழியிலிருந்து அகற்ற மனைவியும் கள்ளக்காதலனும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 11 அன்று இளையராஜாவுடன் மது அருந்தச் சென்ற வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் செல்வம் (23) ஆகியோர், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளையராஜாவைச் சரமாரியாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
கொலையை மறைப்பதற்காக, இளையராஜாவின் சடலத்தைக் காரிலும், அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரை செல்வமும் எடுத்துக்கொண்டு ஒரங்கூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள கிணற்றில் உடலை வீசிவிட்டு, விபத்து போல் காட்டுவதற்காக ஸ்கூட்டரையும் கிணற்றுக்கு அருகில் மோதியது போல் செட்டப் செய்துவிட்டுத் தப்பியுள்ளனர். தற்போது சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், வெங்கடேசன், செல்வம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
