உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலிஸார் பெண்ணை தாக்கும் இந்தக் கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்றவர்களின் செல்போன்களையும் போலிஸார் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய போலிஸாரின் இத்தகைய அராஜகப் போக்கு குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஜாண்பூர் மாவட்ட போலிஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
