திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டம் ஆஷாபாரி எல்லைப் பகுதியில், கடந்த நவம்பர் 2 அன்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கடத்தல்காரர்கள் மற்றும் சில உள்ளூர் மக்கள் இணைந்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்த மோதலில், உதவி கமாண்டன்ட் உட்பட மூன்று பிஎஸ்எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அந்த வன்முறைக் கும்பல் வீரர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றதுடன், அரசு வாகனத்தையும் அடித்து நொறுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக திரிபுரா காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 18 பேரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா தலைமையில் உயர்மட்டப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கடத்தல் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, எல்லையோரக் கிராமங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பிஎஸ்எப் அதிகாரிகள், திரிபுரா காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர் எல்லையோரப் பகுதிகளில் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கினர்.
இக்கூட்டுக் குழுவினர் எல்லையோர வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நிலப் பட்டாக்கள் மற்றும் உரிம ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது, அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் சில கண்டறியப்பட்டதுடன், அங்கு வசிப்பவர்களில் பலரிடம் முறையான இந்திய குடியுரிமை ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியதாகச் சந்தேகிக்கப்படும் பலரைத் திரிபுரா காவல்துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களின் உண்மையான அடையாளம் மற்றும் குடியுரிமை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
