ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரின் ஜோட்வாரா பகுதியில் உள்ள கணேஷ் நகர் கோயிலில், 63 வயதான ராம் கிருஷ்ணா என்ற பூசாரி குழந்தைகள் சிலருக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள், பூசாரியிடம் ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது பூசாரியின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும், அவர் கழுத்தில் அணிந்திருந்த மாலைகள் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் முழுமையாகக் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பூசாரி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களை அடையாளம் காணவும், இந்த மோதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறியவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
