சென்னை பாரிமுனையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சிவக்குமார் (38) என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன் பிறகு, சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியதால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த விஜய சாரதி, மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி சிவக்குமாரை இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சிவக்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பியைக் கொலை செய்த இந்த கொடூர சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, குற்றவாளியான அண்ணன் விஜய சாரதியை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
