“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பியுள்ளார். அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை உயர்த்துவது தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர், “எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்” என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் அரசுக் கல்லூரிகளில் அடிப்படைச் சான்றிதழ்கள் பெறக்கூட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் தனியார் கல்லூரிகள் தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்துப் பேசுகையில், லஞ்ச விவகாரத்தில் தானே நேரடிப் பாதிக்கப்பட்ட சாட்சி என்று அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். “முந்தைய ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெறக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்; நாங்களும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால் இந்த கசப்பான அனுபவம் எனக்கு நேரிட்டது” என்று சட்டப்பேரவையில் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.

   

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தற்போது அவையில் இல்லாததைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த முறைகேடு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே உண்மையை வெளியிடுவதாகத் தெரிவித்தார். “என் மீது அவர்கள் அவதூறு வழக்கு தொடுத்தாலும் அல்லது விசாரணைக்கு அழைத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எந்த இடத்தில், எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது, சிறுபான்மைப் பள்ளிகளிடம் எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்ற அனைத்து விவரங்களையும் என்னால் தெளிவாக நிரூபிக்க முடியும்” எனச் சவால் விடுத்தார்.

   

ஆவணச் சான்றுகளைத் தாண்டி, பாதிக்கப்பட்ட நானே நேரடிச் சாட்சியாக நிற்பதாக நிதியமைச்சர் உறுதியாகக் கூறியது சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடந்த கால ஊழல்களைப் அம்பலப்படுத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.