அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே.மோகன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிருப்தியில் இருந்த தூசி மோகன் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கையோடு, தூசி கே.மோகன் இன்று காலை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் தவெக சார்பில் செய்யாறு தொகுதி வேட்பாளராகவும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் மாற்றுக்கட்சிக்குச் சென்று வேட்பாளராக மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
