வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்ற தவறான பிம்பத்தை உடைக்கும் வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் அரியானேவின் (Ariane) இந்தியப் பயண அனுபவங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த நவம்பர் 3-ஆம் தேதி முதல் ராஜஸ்தானின் புஷ்கரில் முகாமிட்டுள்ள அவர், உலகப் புகழ்பெற்ற புஷ்கர் ஒட்டகத் திருவிழாவின் போது தனக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவங்களை வீடியோக்களாகப் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, அன்றுதான் அறிமுகமான முன்பின் தெரியாத உள்ளூர் நபர்களுடன் இணைந்து தார் பாலைவனத்தில் கூடாரம் அமைத்து இரவு தங்கிய அனுபவத்தை அரியானே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “தெரியாதவர்களுடன் பயணம் செய்யக்கூடாது என்பார்கள்; ஆனால், எதிர்பாராத இந்தப் பயணமே இந்தியாவில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நினைவாக மாறிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாலைவனக் குளிரில் பாரம்பரிய மண் குவளையில் (குல்ஹட்) வழங்கப்பட்ட சூடான தேநீரும், புதிய மனிதர்களின் அன்பான உபசரிப்பும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புஷ்கரில் சந்தித்த பாரம்பரிய ‘கல்பேலியா’ (Kalbelia) பழங்குடியினப் பெண்களின் கண்களில் பல தலைமுறைகளின் வரலாறும், வலிமையும் தெரிவதாக அவர் வியந்து பாராட்டியுள்ளார். வெறும் சுற்றுலாப் பயணியாக மட்டும் இல்லாமல், காக்ரா சோலி மற்றும் சேலை போன்ற ராஜஸ்தானிய பாரம்பரிய உடைகளை அணிந்து, உள்ளூர் மக்களுடன் நடனமாடியும், மருதாணி இட்டும், அவர்களோடு சேர்ந்து சமைத்து உண்டும் இந்தியக் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்துள்ளார்.
அரியானேவின் இந்த இயல்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “உங்கள் கண்கள் வழியாக உண்மையான இந்தியாவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் விருந்தோம்பலையும், பாதுகாப்பையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ள அரியானேவின் இந்தப் பயணம், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
