ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவின் போது தாத்தா எந்தவிதத் துக்கமும் அடையாமல் இருந்ததால், அவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
தாத்தாவைக் கொல்வதற்கு முன்பாகக் கூகுளில் கொலை செய்வது எப்படி எனத் தேடிப் பார்த்த அந்தச் சிறுவர்கள், திட்டமிட்டபடி தாத்தாவை ஸ்க்ரூ டிரைவர் மற்றும் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று ஆற்றில் வீசி எறிந்துவிட்டு, இரத்தக் கறை படிந்த ஆடைகளையும் மூட்டையையும் எரித்து ஆதாரங்களை அழித்துவிட்டு வீட்டிற்குச் சென்று நிம்மதியாக உறங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
