கர்நாடக மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த திருநங்கையை, அவரது காதலனே படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் (31) என்ற ஆட்டோ ஓட்டுநரும், பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாசினி (29) என்ற திருநங்கையும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை பகுதியில் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து கடந்த 6 ஆண்டுகளாகக் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளன. சேகர் திருநங்கையுடன் வாழ்ந்து வருவது அவரது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்றும், அதனால் அவருக்குத் தனியாகப் பெண் பார்த்து வந்துள்ளனர். இது குறித்துத் தெரிந்த சுகாசினி, சேகரிடம் நியாயம் கேட்டுத் தர்க்கம் செய்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சேகர், சுகாசினியைத் தனது சேலையாலேயே கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
சுகாசினியின் உயிரைப் பறித்த பிறகு, குற்ற உணர்ச்சியால் சேகரும் அதே வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்ட சக திருநங்கைகள் அதிர்ச்சியடைந்து காவல் துறைக்குப் புகார் அளித்தனர். பணப் பிரச்சினையாலும் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினாலும், முறையான பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணைக்குப் பின்னரே முழுமையான உண்மைகள் தெரியவரும் என்று புரூஸ்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.
