டெல்லி மங்கோல்புரி பகுதியில், வீடுகளில் தூய்மைப் பணி செய்து வந்த 35 வயது திருமணமான பெண் ஒருவர், அவரது காதலன் மற்றும் அவரது உறவினர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இறைச்சிக் கடை நடத்தி வரும் 22 வயது இளைஞருக்கும், 5 குழந்தைகள் கொண்ட அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, அந்த இளைஞர் தனது நண்பரின் விடுதி அறைக்கு அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த இளைஞரின் 50 வயது மாமா மற்றும் 52 வயது நண்பருடன் பாலியல் ரீதியாக உடன்படுமாறு அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளனர். இந்தப் பெண் இந்தக் கோரிக்கையை வன்மையாக மறுத்து எதிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்தப் பெண்ணைத் தரையில் தள்ளித் தாக்கியதுடன், போர்வையால் முகத்தை அழுத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், பெண்ணின் உடலை அறையிலிருந்த கட்டிலின் பெட்டிக்குள் (Bed box) மறைத்து வைத்துவிட்டு மூவரும் தப்பியோடினர். இது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
