தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், பர்வதம்மாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமலு என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. இவர்களின் கள்ளக்காதலை கணவர் சந்திரப்பா கண்டித்ததால், ஆத்திரமடைந்த பர்வதம்மா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது கள்ளக்காதலன் ராமலுவுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்தார். இந்த வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த பர்வதம்மாவும் ராமலுவும், தங்களது பழைய உறவைத் தொடர்ந்து கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் ராமலுவிற்கு லட்சுமி என்ற மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பர்வதம்மா, ராமலுவை கண்டித்ததோடு லட்சுமியையும் கடுமையாகத் திட்டியுள்ளார். இருப்பினும், ராமலு லட்சுமியுடனான தனது உறவை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பர்வதம்மா ராமலுவிடம் லட்சுமியுடனான தொடர்பை முறித்துக் கொள்ளுமாறும், அவனது பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமலு, தனது இரண்டாவது கள்ளக்காதலி லட்சுமியுடன் சேர்ந்து பர்வதம்மாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். அதன்படி, பர்வதம்மாவை வழக்கம்போல மது அருந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்ற ராமலு, அவர் போதையில் இருந்த சமயம் பார்த்து லட்சுமியுடன் இணைந்து கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் பர்வதம்மாவை கொடூரமாகக் கொலை செய்தார்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக பர்வதம்மாவின் நகைகளைத் திருடிக்கொண்டு, அவரது உடலை அங்கிருந்த மக்காச்சோளக் கழிவுகளுடன் சேர்த்து தீ வைத்து எரித்துவிட்டு இருவரும் தப்பியோடினர். வயலில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். இதற்கிடையில், பர்வதம்மாவின் மகன் தனது தாயைக் காணவில்லை எனப் புகார் அளித்ததன் அடிப்படையில் சடலம் பர்வதம்மா என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராமலுவும் லட்சுமியும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதலனுக்காகக் கணவனைக் கொன்ற பெண், அதே கள்ளக்காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
