உத்திரபிரதேசம் மாநிலம் காசிபாத் மாவட்டம் சராய் பஸ்தி பகுதியை சேர்ந்த இம்ரான் (49) என்ற பால் வியாபாரி கடந்த 2007 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் பல வருடங்களாக சிறையில் இருந்து அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜாமீன் கிடைத்ததன் மூலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இம்ரான் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இம்ரானை நேற்று சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான். சைக்கிள் கடையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இம்ரானை பைக்கில் வந்த சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்தான். இதனைத் தொடர்ந்து சிறுவன் போலீசில் சரணடைந்த நிலையில் இம்ரான் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மாமாவை 2007 ஆம் ஆண்டு இம்ரான் கொலை செய்ததால் 18 வருடங்களுக்குப் பிறகு அவரை சுட்டுக்கொலை செய்ததாக சிறுவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனைத் தொடர்ந்து போலீஸ் ஆறு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
