மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விளையாடச் சென்ற ஒன்பது வயது சிறுவன், கதவுகள் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த வேலுமணி என்பவரின் மகன் முகுந்த் (9), தனது வீட்டின் முன் வழக்கமாக நிறுத்தப்படும் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் என்பவரது காரினுள் வீட்டிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டு சென்று விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் தானாக மூடிப் பூட்டிக்கொண்டதால், சிறுவனால் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளார்.
மாலையில் காரை எடுப்பதற்காக வந்த ஆசிரியர் மணிவண்ணன், காரினுள் சிறுவன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிறுமுகை காவல் துறையினர், காரின் கதவு திறந்தே இருந்ததா அல்லது சிறுவன் எவ்வாறு காரின் சாவியை எடுத்து உள்ளே சென்றார் என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
