ரம்புட்டான் பழம் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. “ரம்புட்” என்ற மலாய் வார்த்தையிலிருந்து இதன் பெயர் உருவாகியது, இந்த பழமானது வெளிப்புறம் மென்மையான முள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உள்ளே ஜெல்லி போன்ற சதைப்பகுதி உள்ளது, இதில் ஒரு விதை இருக்கும். இந்த பழமானது இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்டது.
இதனிடையே ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் அதிரா. இவருக்கு ஒரு வயதில் அவ்யுக்த் என்ற குழந்தை இருந்த நிலையில் நேற்று மாலை பாட்டியுடன் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த ரம்புட்டான் பழத்தை எடுத்து குழந்தை விழுங்கியுள்ளது.
அது குழந்தையின் தொண்டையில் சிக்கிய நிலையில் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு எவ்வளவு சிகிச்சை அளித்தும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் உடல் பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் பிணவறையில் தற்போது உள்ளது. குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுத்தாலும் அதில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.
