“திரிஷா விஜய் பெயரில் புத்தகமா?”….. பெரியார் அறிவுலக நூலக முறைகேடு பின்னணியில் பகீர் ரகசியம்.. DVAC-ல் இறங்கிய திமுக புகார்கள்…!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக சட்டத்துறை சார்பில் மின்அஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூலகங்களுக்கு தரமான புத்தகங்களை வழங்கும் பொருட்டு வெளிப்படைத்தன்மையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை திமுக இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், முறைகேடாகத் தயாரிக்கப்பட்ட போலி நூல்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வழியாக அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தையும் திமுக முன்வைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில் பல அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, புத்தகங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களை வழங்கிய அதிகாரிகள் யார், எந்தெந்த தேதிகளில் அந்த ஆர்டர்கள் பதிப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன மற்றும் ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு தொகை கருவூலத்திலிருந்து செலுத்தப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த கோரப்பட்டுள்ளது. அத்துடன், ‘த்ரிஷா விஜய்’, ‘சங்கீதா விஜய்’ போன்ற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலி பெயர்களில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.