தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கடன்… நிதியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த அறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தின் கடன் சுமை குறித்த அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2021-2026 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய ஒட்டுமொத்தக் கடனை விட, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வாங்கிய கடன் அதிகம் என்ற கவலைக்குரிய நிலையை உணர்த்துகிறது.

மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பில் ஈடுபடும் முன்பே, இன்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடன் சுமையோடுதான் பிறப்பதாக நிதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும் தலா ரூ.1,28,934 கடன் இருப்பதாக இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முதலீடு செய்வதற்காக அல்லாமல், அன்றாட அரசு செலவினங்களைச் சமாளிப்பதற்காகவே கடன் பெறப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதன செலவிற்கும் 2.26 ரூபாய் கடன் பெறப்படுகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

   

கடந்த 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்துள்ள சூழலில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 18-ஆம் தேதி தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதற்கு முன்னதாக இந்த முக்கிய நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.