தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தில், தகுதியான பயனாளிகளைச் சரியாகக் கண்டறிந்து பலன்களை முழுமையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் புதிய வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இத்திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், உண்மையான பயனாளிகளுக்குத் தடையின்றிச் சென்றடையவும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு ஆகாதவர்களுக்குக் கருவிழி ஸ்கேன், முக அங்கீகாரம், செல்போன் OTP மற்றும் அசல் ஆதார் கடிதத்தில் உள்ள QR Code ஸ்கேன் எனப் பல அடுக்குச் சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆதார் அட்டை இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு அரசுத் துறைகள் மூலமாகவே தற்காலிக சிறப்புப் பதிவு முகாம்கள் அமைத்து உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புப் பொதுமக்கள் மற்றும் சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
