“அறையில் இருந்த போது திடீரென்று… பயந்து ஓடிட்டேன்…” காரில் இளம்பெண் சடலம்… சாஃப்ட்வேர் ஊழியரின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹன்மக்கொண்டா மாவட்டம் எல்கதுர்த்தி மண்டலப் பகுதியில், கைவிடப்பட்ட காரின் டிக்கியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் காரைத் திறந்து சோதனை செய்தனர். அதில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் கிடைத்த அடையாள அட்டை மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் கோதாவரிகனி சென்டினரி காலனியைச் சேர்ந்த மானசா என்பதும், காரின் உரிமையாளர் வினோத் என்ற சாஃப்ட்வேர் ஊழியர் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வினோத்தைப் பிடித்துக் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கரீம்நகரில் உள்ள ஒரு அறையில் இருந்தபோது மானசாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன வினோத், உடலைக் காரின் டிக்கியில் வைத்துவிட்டுத் தப்பி ஓடியதாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள எல்கதுர்த்தி காவல் துறையினர், மானசாவின் மரணம் வலிப்பால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.