கோவை மதுக்கரை அருகே காட்டுப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், அந்தப் பெண்ணின் ஒரு கையில் ‘ஜெகன்’ என்றும், மற்றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ ஆகிய ஆங்கில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் மதுக்கரை மற்றும் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்தும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் உள்ள பச்சை குத்தப்பட்ட அடையாளங்களை வைத்தும் அவரது அடையாளத்தைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
