தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், சடலத்தின் அருகில் இருந்த அடையாள அட்டையைக் கொண்டு, இறந்து கிடந்தவர் உஸ்மானியா பல்கலைக்கழக காவல் எல்லைக்குட்பட்ட மாணிக்கேஸ்வர் நகரைச் சேர்ந்த மங்கம்மா கேட்டரிங் தொழிலாளி என்பதை உறுதி செய்தனர்.
கடந்த செப்டம்பர் 29 அன்று வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலிஸில் புகார் அளித்திருந்தனர். 9 நாட்களுக்குப் பிறகு தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டிருந்ததால், அவரை யாரேனும் கொடூரமாகக் கொலை செய்தனரா அல்லது தெரு நாய்கள் கடித்துக் குதறியதா என்ற கோணத்தில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
