மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் காணாமல் போன 17 வயது சிறுவன், சில நாட்களுக்குப் பிறகு ஏரி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடற்கூறாய்வில் முக்கிய உடல் உறுப்பு ஒன்று திருடப்பட்டிருப்பது தெரியவந்ததால், காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். காணாமல் போன அந்த உறுப்பின் சர்வதேச மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், உடல் உறுப்பு கடத்தல் கும்பலுக்கு இக்கொடூர கொலையில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 13 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்; எனினும் திருடப்பட்ட உறுப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் தன்னை ஒரு மர்ம கும்பல் தவறான நோக்கத்தோடு அணுகியதாகப் புகார் அளித்துள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறார்களைக் குறிவைத்து ஏதேனும் பெரிய கடத்தல் வலைப்பின்னல் அப்பகுதியில் இயங்குகிறதா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பதை அறிய போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
