“விசில் அடிங்க.. சளியை விரட்டுங்க!”… செங்கோட்டையனின் விசித்திர வாக்கு சேகரிப்பு… ‘தவெக பிரச்சாரத்தில் அரங்கேறிய கூத்து…!!!

By Muthu Mani on சித்திரை 6, 2026

Spread the love

அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் பேசிய வினோதமான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், “சின்னக் குழந்தைகளுக்குச் சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும், சளி குணமாகிவிடும்” என்று கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தினார். மேலும், “முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்” என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பிரச்சாரத்தில் முன்வைத்தார்.

   

அரசியல் களத்தில் பல தேர்தல்களைச் சந்தித்த அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன், “விசில் சின்னம் தான் நாளை இந்தியாவை ஆளப்போகிறது” என்று முழங்கினார். இயற்கையோடு இணைந்து வாழ்வதால் தான் தங்களுக்கு இந்தச் சின்னம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மூச்சுப் பயிற்சிக்கு நிகராக விசிலை ஊதுவது உடல் நலத்திற்கு நல்லது என்கிற ரீதியில் விசித்திரமான முறையில் வாக்கு சேகரித்தார். “பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டால் கல்லீரலுக்கு நல்லது” என்பது போன்ற பாணியில் அமைந்த இவரது பேச்சு வைரலாகி வருகிறது.

   

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணி பலத்துடன் களம் காண்கின்றன. ஆனால், தவெக வேட்பாளர்கள் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தன்னந்தனியாகப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் போன்ற தலைவர்களே இத்தகைய வினோதமான பிரச்சார உத்திகளைக் கையாள்வது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.