மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் மனதை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. தினசரி பால் போடும் நபர் ஒருவர் ஒரு வீட்டின் கதவு இடுக்கிலிருந்து இரத்தம் கசிவதையும், கடுமையான துர்நாற்றம் வீசுவதையும் கவனித்துள்ளார். சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு அறையில் 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. ஆனால், அதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்த சடலத்தின் அருகே வயதான தாய் ஒருவர் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். மேலும், உயிரிழந்த தனது மகனின் மார்பின் மீது அவர் ஒரு புனித பைபிளை வைத்திருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை என்பதும், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரது மகன் மும்பையில் உள்ள ஒரு பிரபல ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், ஐந்து நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். ஆனால், மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அந்தத் தாய், மனநிலை பாதிக்கப்பட்டு, தனது மகன் மீண்டும் உயிரோடு வந்துவிடுவான் என்ற குருட்டு நம்பிக்கையில் பைபிளை அவனது மார்பில் வைத்து இரவும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டு அங்கேயே அமர்ந்திருந்துள்ளார்.
சுற்றவட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே துர்நாற்றம் வீசியபோதிலும், அந்தத் தாய் வழக்கம்போல் தனது அன்றாட வேலைகளைச் செய்து வந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. பால் காரர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்க முயன்றபோது அந்தத் தாய் அவர்களைத் தடுத்துள்ளார். காவல்துறையினர் தனது பிரார்த்தனையைக் கலைத்துவிடுவார்கள் என்று அவர் பயந்துள்ளார். பின்னர், போலீசார் அவருக்குப் புரியவைத்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், வெளிநாட்டில் இருக்கும் அவரது மற்ற மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வயதான தாய் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
