மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மோதல் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் கராஜ் நகரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ‘பி1’ பாலத்தை அமெரிக்க கூட்டுப்படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தித் தகர்த்தது பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், “இன்னும் நிறைய வரும்” என எச்சரித்திருப்பது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்துத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக குவைத், பஹ்ரைன், அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தின் மினா அல்-அஹமதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அந்நாட்டின் மிக முக்கியமான கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ஆகியவை இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி ஏவப்பட்ட ஈரானின் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்ட போதிலும், அதன் பாகங்கள் விழுந்ததில் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவிலும் ஈரானின் ட்ரோன் ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளதால், அந்த நாடுகள் முழுவதும் அபாய கால எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தபடி உள்ளன. ஈரான் அடுத்ததாகத் தகர்க்கப்போகும் 8 முக்கிய பாலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அரபு நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது நாட்டின் உள்நாட்டு உள்கட்டமைப்பைச் சிதைத்ததற்கு, அமெரிக்காவின் நட்பு நாடுகளாக விளங்கும் வளைகுடா நாடுகளின் பொருளாதார ஆதாரங்களைச் சிதைப்பதே ஈரானின் தற்போதைய உத்தியாக உள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியத் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இந்தப் போர் மேலும் விரிவடைந்து உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் என்ற அச்சம் தற்போது சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
