சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் கணவனால் கர்ப்பிணி மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மே 14 அன்று நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் அகரியா, மதுபோதையில் தனது 23 வயது மனைவி ஹீராபாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலின் போது, அவர் தனது மனைவியின் பிறப்புறுப்பில் இரும்பு ரம்ப பிளேடை (Hacksaw Blade) வலுக்கட்டாயமாகச் செருகி சித்திரவதை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் போது இவர்களின் நான்கு வயது மகளும் அதே வீட்டில் இருந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்ததும், கணவன் அவரை மோட்டார் சைக்கிளில் கட்டி அம்பிகாபூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் அவர் சாலை விபத்தில் காயமடைந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார். எனினும், சோதனையில் பெண் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்ததும் அவர் அங்கிருந்து தப்பியோடினார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெண்ணின் உடலில் 17 தீவிரக் காயங்கள் இருந்ததும், அவரது பிறப்புறுப்பில் இருந்து 10 இன்ச் நீளமுள்ள இரும்புப் பொருள் மீட்கப்பட்டதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கணவனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
